Wednesday, November 16, 2016

சாமியாராகவும் வேண்டாம் சந்நியாசியாக போகவும் வேண்டாம் !! எப்போது ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!





சாமியாராகவும் வேண்டாம் !!
சந்நியாசியாகபோகவும்வேண்டாம்!!


தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம்   :-  கூடா ஒழுக்கம்.
குறள் எண் :-  280.


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்... ... ...


பொருள்  :-  தவக்கோலத்தைக் வெளிக்காட்ட 
மொட்டை அடிக்கவோ முடி வளர்க்கவோ 
தேவையில்லை. உலகம் பழித்திடும் செயல்களை ஒழித்துவிட்டாலே போதும். இது வான்புகழ்திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :-  என்ன கிந்தன் தம்பி ரொம்ப நாளா 
ஏரியா பக்கமே பாக்க முடிலே. என்ன ஊருக்கு 
போயிருந்தீகளா.
கிந்தன்:-  ஆமா அண்ணே எங்க அக்கா வூடு 
விழுப்புரத்துல இருக்கு. அக்கா பொண்ணு 
பெரிய மனுசி ஆயிருச்சு. அதான் தாய்மாமன் 
நான் முறை செய்ய போனேன். 
கந்தன் :- அப்ப உனக்கு பொண்ணு ரெடி 
ஆயிடுச்சுன்னு சொல்றா தம்பி.
கிந்தன் :- ஐயய்யோ .. அதெல்லாம் இல்ல 
அண்ணே. எனக்கும் அக்கா பொண்ணுக்கும்
10 வருஷம் வயசு வித்தியாசம். நான் மூப்பு.
அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.
கந்தன் :- ஏண்டா தம்பி இன்னைக்கு தமிழ் 
மாசம் கார்த்திகை ஒன்னாம் தேதி. நம்ம 
பேட்டை ரவுடி பெருமாள் பிச்சை என்னடா 
காலைலே சீக்கிரமா எழுந்து கோவிலுக்குப் 
போயி காவிவேட்டி காவி சட்டை கருப்பு 
துண்டு அமர்க்களமா எங்கடா போறான் ?
உனக்கு எதுனாச்சும் தெரியுமாடா ?
கிந்தன் :-  உங்களுக்கு விசயமே தெரியாதா ?
அண்ணே அவன் சபரிமலைக்கு போறான்னே.
அதான் வெள்ளென எழுந்து குளிச்சு சாமி 
கும்பிட்டு மாலை போட்டு விரதம் ஆரம்பிக்க 
கோயிலுக்குப் போயிருப்பான்.
கந்தன் :- கிழிஞ்சுது போ. வருசம் பத்துமாசம் 
டாஸ்மாக் கடையே கதின்னு கிடந்தது குடிக்க 
வேண்டியது. கோனார் கடைலே அல்லா 
மாமிசத்துலே இருந்து கோழி,காடை,கவுதாரி,
மீன் அது இதுன்னு வெட்ட வேண்டியது. இந்த 
ரெண்டு மாசம் மட்டும் என்ன யோக்கியன் 
வேசமாட போடுறான் அந்த பேமானி.
கிந்தன் :- சரி. விடுங்க அண்ணே. ஏதோ இந்த 
ரெண்டு மாசமாச்சும் அந்தக் கசமாலத்தை 
எல்லாம் நினைக்காம, துன்னாம, குடிக்காம 
இருக்கானே அத்த நினைச்சு பெருமைப்படுங்க 
அண்ணே.
கந்தன் :- அடே..தம்பி.. வருஷம் பூராவும் சுத்தமா 
இருக்கனும்டா. அதுலேயும் மனசு..மனசு..அது 
சுத்தமா இருந்தா அது போதும்டா. இந்த வெளி 
வேசம் எல்லாம் எதுக்குடா ? தம்பி. என்ன நான் 
சொல்றது. இத்த நான் மட்டும் சொல்லலடா 
நம்ம அய்யன் திருவள்ளுவர் அவர்கூட இத்த 
பத்தி ஒரு குறள்ளே சொல்லிக்கீறார்டா. இப்ப 
நம்ம மதுரை TR. பாலு, தினம் ஒரு திருக்குறள் 
அப்டின்னு வலைதளத்துலே எழுதுரார்ல.
அத்த படிச்சுட்டுத்தண்டா வாரேன். 
கிந்தன் :- அப்டியாண்ணே. வள்ளுவர் இத்தக்கூடவா எழுதிருக்காரு ?
கந்தன் :-  அட..ஆமாடா..என் அருமைத்தம்பி.
நீ மொட்டை அடிக்கவும் வேணாம் தாடி வளக்கவும் வேணாம். உலகம் பழிக்கும் காரியங்கள் எதையுமே செய்யாம இருந்தா போதும். அப்டின்னு. எப்படி பாத்தியாடா தம்பி. வள்ளுவர் வள்ளுவர்தாண்டா.அதனாலதான் நம்ம தல கலைஞர், அன்னாருக்கு 
கன்னியாகுமரி மூணு கடலும் சேரும் இடத்துல 
அம்புட்டு உயர சிலை வச்சிருக்காருடா. அதக்கூட இந்த சர்க்காரு சரியா பெயின்ட் அடிச்சு காப்பாத்த மாட்டேன்றாங்க. ஏன்னா சில வச்ச பெருமை அவருக்குப் போயிரும் என்ற சின்ன புத்திடா தம்பி. சரி அப்பால நேரம் ஆச்சு. வாரேண்டா தம்பி.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T,R.பாலு.

No comments:

Post a Comment